விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 9 January 2017

வள்ளல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் பழனி .ஜி பெரியசாமி அவர்களுக்கு பாராட்டு விழா

ஊரே திரண்டு வந்து கொண்டாடிய  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின்
வள்ளல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா !
ஊற்றங்கரை  விடுதலை வாசகர் வட்டத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்வாக ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து வள்ளல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் மனிதநேய மாண்பாளர் பழனி .ஜி.பெரியசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகுந்த எழுச்சியுடனும் ,உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. ஊற்றங்கரை நகரம் முழுக்க  விழா குறித்த வண்ண பதாகைகள் வைக்கப்பட்டு சென்னை பெரியார் திடலில்  நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் இரண்டாவது விழா என்கிற மாட்சியோடு விழா நடைபெற்றது
ஊற்றங்கரை திருமண மண்டபத்தில் அரங்கம் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களின் பல்வேறு வகையான உருவங்கள் படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன .அரங்கத்திற்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியை காணும் வகையில் பெரிய டிஜிட்டல் திரை வைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பபட்டன .நிகழ்வின் தொடக்கத்தில் ராஜ் டிவியின் ‘’எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் “ ஆவணப்படம் திரையிடப்பட்டது .காலை 1௦ மணியளவில் ஊற்றங்கரை நகர அ.இ.அ.தி.மு.க  நகர செயலர் ப.க .சிவானந்தம் வரவேற்ப்புரை ஆற்றிட விடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலர் சித.வீரமணி அவர்களின் அறிமுக உரையோடு விழா தொடங்கியது
தமிழகத்தில் மிக புகழ்பெற்ற கல்வி நிறுவனமான வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரனார் அவர்கள் தலைமை தாங்கினார் ஊற்றங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் அவர்களும் ,அ.இ.அ.தி.மு.க ஒன்றிய செயலர் ஏ.சி.தேவேந்திரன் அவர்களும் அண்ணா தொழிற்ச் சங்க  மாவட்ட பொறுப்பாளர் நாகராஜன் அவர்களும் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அகிலா எழிலரசன் அவர்களும்  முன்னிலை வகித்து உரையாற்றினர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்ட  ‘’நூற்றாண்டு விழா நாயகர் வள்ளல் எம்.ஜி.ஆர் ‘’என்கிற நூலினை திராவிடர் கழக மாவட்ட செயலர் வி.ஜி இளங்கோ வெளியிட நிகழ்வின் தலைவர் வே.சந்திரசேகரனார் பெற்று கொண்டார் .வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும்  உண்மை இதழ் வெளியிட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன் வழங்கினார்.தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அனுப்பிய  வாழ்த்து கடிதம் படிக்கப்பட்டது
விழாவில் பாராட்டு பெரும் மனிதநேய மாண்பாளர்  பழனி.ஜி..பெரியசாமி அவர்கள் குறித்தும் அவர் எழுதிய ‘’இதய ஒலி” நூல் குறித்த  காணொளி திரையிடப்பட்டது . ’இதய ஒலி” நூல் குறித்த அறிமுக உரையை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி வழங்கினார் .கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவர் பா.சாகுல் அமீத் வெளியிட வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் க.அருள் பெற்றுகொண்டார் .ஏராளமானோர் வரிசையில் நின்று நூலினை பெற்றுக்கொள்ள ஏறக்குறைய 1௦௦ க்கும் மேற்பட்ட நூல் மேடையிலேயே விற்று தீர்ந்தது
இதயக்கனி மாத இதழின் ஆசிரியரும் ,பத்திரிகையாளருமான இதயக்கனி எஸ் விஜயன் வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .சீரிய பகுத்தறிவாளரும் ,எம்.ஜி.ஆர் பற்றாலாருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற தலைவர் வழக்கறிஞர் வீ.சந்திரன் புகழுரையாற்றினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முதன்மை பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் பழனி.ஜி.பெரியசாமி அவர்களை பாராட்டி உரையாற்றினார் . கண்ணாடி பேழையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை  அனைவரும் எழுந்து நின்று மிகுந்த கரவொலி இடையே பழனிஜி.பெரியசாமி அவர்களை பாராட்டி வழங்கப்பட்டது .அத்துடன் வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது
நிறைவாக பாராட்டு பெற்ற பழனி.ஜி.பெரியசாமி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் .அவர் தனது ஏற்புரையில் விடுதலை வாசகர் வட்ட பணிகளை பாராட்டுவதுடன் மேடையில் விற்பனையான தமது இதய ஒலி நூலுக்கான தொகை ரூ 3௦,௦௦௦த்தையும் வாசகர் வட்ட பணிகளுக்கு வழங்குவதாக பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். நிகழ்வினை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு ஒருங்கிணைக்க ஆடிட்டர் லோகநாதன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது தொடர்ந்து  இது போன்ற நிகழ்வுகளை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் வழங்கவேண்டும் என்று விழாவில் பங்கேற்ற அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்