விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 31 October 2013

சுப.வீரபாண்டியன்



   

சுப வீரபாண்டியன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; இதழாளர்; திராவிடத் தமிழ்தேசியர்; கடவுள் மறுப்பாளர்; பெரியாரியலாளர்; அம்பேத்கர் பற்றாளர்; தமிழீழ ஆதாரவாளர்.என பன்முகங்கள் கொண்ட  சுபவீ என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகரில் 1952 ஆம் ஆண்டில் திராவிட இயக்கத்தினர்களான இராம. சுப்பையா - விசாலாட்சி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான SP. முத்துராமன் இவர்தம் அண்ணன் ஆவார்.
           இவர்  தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் காரைக்குடியில் பெற்றார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று இயற்பியலில் அறிவியல் இளவர் பட்டம் பெற்றார். தமிழிலக்கியம் பயின்று கலை முதுவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். தனது கல்லூரிக் கல்வியை முடித்ததும் சென்னையில் இருந்த வணிக நிறுவனம் ஒன்றில் ஓராண்டு தட்டச்சராகப் பணியாற்றினார். பின்னர் உயர்கல்வி பெற்று சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றார் .
       இவரின் தந்தையும் தாயும் 1937 ஆம் ஆண்டு முதலே சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என அரை நூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து அரசியலில் இயங்கி வந்தனர். இதனால் இளமையிலேயே இவருக்கு  அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுதே திராவிட இயக்க ஆதரவாளராக வளர்ந்தார். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவி  பொதுச்செயலாளராகத் தற்பொழுது இயங்கி வருகிறார்.கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகவும்  பொறுப்பு வகிக்கிறார்.
         இவர் தமிழீழ ஆதரவு நடவடிக்கைகளின் காரணமாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் விடுதலை அடைந்தார்.தனது சிறை அனுபவங்கள் குறித்து அது ஒரு பொடா காலம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். தன் தந்தை இராம. சுப்பையாவிடம் உரையாடி, அவரது திராவிட இயக்க அனுபவங்களை “எனது வாழ்க்கையும் திராவிட இயக்க அனுபவங்களும்” என்னும் நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார் .அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.


No comments:

Post a Comment