விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெறும்
மேனாள் திமுக ஒன்றிய செயலர்
மூத்த திராவிட இயக்க உறுப்பினர் மயிலேரி.க.சண்முகம்

தீவிர திராவிட பற்றுடனும் கொள்கை உறுதியுடனும் வாழ்ந்து வரும் திருமிகு.மயிலேரி.கா .சண்முகம் அவர்கள் 1-06 -1927 அன்று வேளாண்மையை தொழிலாக கொண்ட பெற்றோர்க்கு சேலம் மாவட்டம் இன்றைய சங்ககிரி வட்டம் மயிலேரிபட்டியில் பிறந்தவர். இவருக்கு 2 சகோதரர்கள் 1 சகோதரி.
வேளாண்மை காரணங்களால் குடும்பத்துடன் ஊற்றங்கரை இடம் பெயர்ந்த திருமிகு.மயிலேரி.க.சண்முகம் அவர்கள் இளமையில் பொதுவுடமை இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர் .திருப்பத்தூர் அரசினர் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தவர் .தீவிர பகுத்தறிவாளரான இவர் பள்ளி பருவத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஈடுபாடு கொண்டவராய் மாறினார் .இவரது பள்ளி தோழர்கள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கிருஷ்ணன் ,மேனாள் ஊற்றங்கரை பேரூராட்சி தலைவர் வ.சாமிநாதன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்
60 ஆண்டுகள் திமுக உறுப்பினர், திமுக ஆரம்ப நாள் உறுப்பினர், என்கிற பெருமையுடய திருமிகு.மயிலேரி.கா.சண்முகம் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் இருமுறை சிறை சென்றவர் .மொழிப் போர் தியாகி என திமுக தலைமையால் பாராட்டப்பட்டவர் .கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றதுடன் பெரும் திரளான தோழர்களை திரட்டி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார்.அதிக நிதி வசூல் செய்து கழகத்திற்கு அளித்தமைக்கு அண்ணா அறிவாலையத்தில் கலைஞர் அவர்களால் உதயசூரியன் சின்னம் பொறித்த மோதிரம் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்
ஊற்றங்கரை திமுக ஒன்றியச் செயலராக தொடர்ந்து 18 ஆண்டுகள் பணியாற்றிய.திருமிகு.மயிலேரி.கா .சண்முகம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.கிருஷ்ணன் ,டாக்டர் சின்னராசு,திருமதி .வேடம்மாள் ஆகியோர்களின் வெற்றிக்கு பாடுபட்டவர் .ஊற்றங்கரை நகரின் மையப் பகுதியில் அலங்கரிக்கும் பேரறிஞர் அண்ணா சிலைக்கான இடம் கழகத்திற்கு உரிமையாக்கியதில் முக்கிய பங்காற்றினார் .1974 இல் ஊற்றங்கரை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை துவக்கி 20 ஆண்டுகள் தலைவர் பணியாற்றியதுடன் அச் சங்கத்திற்க்கு இடம் வாங்கிய பெருமை இவரையே சாரும் .D.D.9 கூட்டுறவு சங்க தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.மத்தூர் ஒன்றிய திமுக தலைவர் ,மாவட்ட உறுப்பினர் ,திமுக பொதுக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புக்கள் வகித்தவர் .
தனது 26 ஆம் வயதில் வசந்தா அம்மையாரை வாழ்விணையராக ஏற்றுக்கொண்ட மயிலேரி.கா.சண்முகம் அவர்களுக்கு யோகபாலன் என்கிற மகனும் சசிகலா என்கிற மகளும் உண்டு .வேளாண்மையை தொழிலாக கொண்ட இவர்கள் வாழ்வில் மருமகன் ,பெயரன் ,பெயர்த்தி என பலரும் மருத்துவர்களாகவும் ,பொறியாளர்களாகவும் உள்ளனர்.
திமுகவின் மாவட்ட செயலர்கள் ஆர்.சின்னசாமி.,சென்னகேசவன் ,முல்லைவேந்தன் ,கமலநாதன் ,காஞ்சனா கமலநாதன் ,உள்ளிட்ட பலருடனும் நெருக்கமான தொடர்பையும் இயக்க பணியும் கொண்டவர் .தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,டாக்டர் கலைஞர் ,தளபதி ஸ்டாலின் வழியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என செயலாற்றிவரும் மூத்த திராவிட இயக்க உறுப்பினரை விடுதலை வாசகர் வட்டத்தில் பாராட்டுவதில் பெருமை கொள்கிறது
No comments:
Post a Comment