ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 16 December 2014
Monday, 15 December 2014
Friday, 14 November 2014
குழந்தைகளுக்கான குறும்படம் திரையிடல்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 46 ஆம் நிகழ்வான குழந்தைகள் தின விழாவை முன்னிட்டுகுழந்தைகளுக்கான குறும்படம் திரையிடல் ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 1௦ மணியளவில் நடைபெற்றது
இந்த
நிகழ்விற்கு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார் .
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் அவர்களும் ,உச்சநீதிமன்ற
நீதிபதி நீதியரசர் பானுமதி அவர்களின் சகோதரியும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற
ஆசிரியை புவனேஸ்வரி அவர்களும் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக
மண்டல செயலாளரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ
.வெங்கடாசலம் அவர்களும் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் இர
.வேங்கடம் அவர்களும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி வாழ்த்துரையாற்றினார்
வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு அவர்கள் குறும்படங்கள் குறித்த அறிமுக
உரையாற்றிட ‘’தேர்வு ‘’ பரிசு’’ ‘’1மார்க்‘’ ‘’மக்கு’’ பேரறிஞர் அண்ணாவின்
செவ்வாழை போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டது மாணவர்கள் குதுகலத்துடன் கைத்தட்டி
குறும்படங்களை ரசித்தனர் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர்
தணிகை.ஜி.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் மாணவர்கள் அனைவருக்கும் பிஸ்கட் மற்றும்
இனிப்புக்கள் வழங்கப்பட்டன நிறைவாக ஆசிரியர் பழனி நன்றி உரையாற்றினார்
இந்த
நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ஆசிரியர் ஆசிரியை பெருமக்களும் வாசகர்
வட்ட துணைத்தலைவர் சாமிநாதன் ,நிருபர் கீ .ஆ கோபாலன் ,திராவிடர் கழக நகர
அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி,வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் , வாசகர்
வட்ட பொருளாளர் ஆடிட்டர் ராஜேந்திரன் ,சாரணர் இயக்க பொறுப்பாளர் ஆசிரியர் கணேசன்
நேசம் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் குணசேகரன் ,ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர் . ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் இந்த மாணவர் நலப்பணிக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் பாராட்டும்
தெரிவிக்கப்பட்டது Thursday, 6 November 2014
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் -அறிமுகம்
ஜாதி ,மதம் ,அரசியல் கட்சி,ஆத்திகம் நாத்திகம் வேறுபாடு இன்றி பலரும் இதில் உறுப்பினராக உள்ளனர்
மாதந்தோறும் கலை,இலக்கியம் ,வரலாறு ,கல்வி,சமூகநீதி ,சட்டம் ,அறிவியல் உள்ளிட்ட தலைப்புக்களில் அறிஞர் பெருமக்களை அழைத்து கூட்டம் நடத்துவது ,சமுகத்திற்கு தொண்டாற்றிய பெருமக்களின் படத்தை திறந்து நினைவு கூர்வது ,ஊற்றங்கரை மண்ணிற்கு பெருமை சேர்த்த அழைத்து பாராட்டுவது வாசகர் வட்டத்தின் நோக்கமாகும்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்றுள்ள கருத்தரங்கமும் - கருத்துரையாலர்களும்
1.விடுதலை ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள் கருத்தரங்கம் -முன்னால் N .G .O சங்க தலைவர் சு.அறிவுக்கரசு2.தமிழ் புத்தாண்டு& தமிழர் திருநாள் கருத்தரங்கம் -துரை.சந்திரசேகரன்
3.இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் -Dr.சிவசுப்பிரமணியம்M .D .(cardio )
4.மகளிர் தின கருத்தரங்கம் -வழக்கறிஞர் .அ.அருள்மொழி
5.தன்னம்பிக்கை பயிற்சி கருத்தரங்கம் -தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஜாகிர் ஹுசைன்
6.மே தின கருத்தரங்கம் – கவிஞர்.இ.சாகுல் அமீத்
7.திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம் -பெரியாரியல் பேச்சாளர் பெரியார் செல்வன்
8.காமராஜர் பிறந்த நாள் விழா –திராவிடர்கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன்
9.தமிழ் இணைய பயிலரங்கம் -புதுவை பேராசிரியர் .மு.இளங்கோவன்
10.பெரியார் பிறந்த நாள் விழா -முன்னால் அமைச்சர் வ.முல்லைவேந்தன்
11.பெண்ணியம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் -பெரியார் பல்கலைகழக பதிவாளர் .பெ .மாதையன்
12.ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் - நிழல்.திருநாவுக்கரசு
13.மூடநம்பிக்கை குறித்த சிறப்பு கருத்தரங்கம் - மருத்துவர் எழிலன்
14.மொழிப் போர் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் -இ .ஜி .சுகவனம் M P
15.தமிழர் தொன்மை குறித்த கருத்தரங்கம் -ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்ரமணியம்
16.உலக மகளிர் தின விழா - கவிஞர் .ருக்மணி
17.திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் -நக்கீரன் துணை ஆசிரியர் கோவி .லெனின்
18.நகைச்சுவை குறித்த சிறப்பு கருத்தரங்கம் -தமிழ்நெஞ்சன்
19.வாசகர் வட்ட சிறப்பு கருத்தரங்கம் –
தமிழர் தலைவர்கி.வீரமணி
20.பச்சைத்தமிழர் காமராஜர் 110 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா - தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா
21.மனிதநேயக் கருத்தரங்கம் -பேராசிரியர் சிராஜுதீன்
22.தந்தை பெரியார் 110 ஆம் நாள் கருத்தரங்கம் -வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா
23.நெதுசு நூற்றண்டு விழா -பேராசிரியர் மங்கள முருகேசன்
24.ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கம் - வழக்கறிஞர் பூவை .புலிகேசி
25 மத வெறி எதிர்ப்பு கருத்தரங்கம் -முனைவர் அதிரடி.அன்பழகன் .
26.தமிழ் மொழி குறித்த கருத்தரங்கம் -சூரியன் பண்பலை தொகுப்பாளர் இ .இராஜசேகர்
27.மகளிர் எழுச்சிக் கருத்தரங்கம் -ஊடகவியலாளர் கவின்மலர்
28.புரட்சிகவிஞர் விழா -திராவிட இயக்க சொற்பொழிவாளர் இராம .அன்பழகன்
29.ஜாதி தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் –கவிஞர்.அழகியபெரியவன்
30.டாக்டர் கலைஞர் பிறந்த நாள் கருத்தரங்கம் -எழுத்தாளர் க.திருநாவுக்கரசு
31காமராஜ் திரைப்படம் திரையிடல்
32.இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் - வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்
33.தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் -எழுத்தாளர் .வே.மதிமாறன்
34.திராவிடர் எழுச்சிக் கருத்தரங்கம் -பேராசிரியர் .சுப.வீரபாண்டியன்
35.கலைவாணர் என்.எஸ்.கே பிறந்தநாள் விழா கருத்தரங்கம் –கலைவாணரின் மகன் என்.எஸ்.கே.நல்லதம்பி
36. மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கம் –எழுத்தாளர் அ.மார்க்ஸ்
37.நான்காம் ஆண்டு தொடக்கவிழா –திராவிடர்கழகபொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
38. விற்பனைவரி வருமானவரி தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் –திருமிகு ஆடிட்டர் சேதுபதி
39. காணொளிச் சங்கமம்
40. அம்பேத்கார் திரைப்படம் திரையிடல்
41.தமிழ்மொழி குறித்த சிறப்பு கருத்தரங்கம் –கவிஞர்அறிவுமதி
42. பகுத்தறிவுத்திரை காணொளி தொகுப்பு
43.பச்சை தமிழர் காமராஜர் 112 பிறந்தநாள் விழா கருத்தரங்கம் – அகில இந்திய காங்கிரெஸ் பொதுச்செயலர்-Dr.அ.செல்லக்குமார்
44..மாணவர்களுக்கான கருத்தரங்கம் -மருத்துவர் மரியானோ ஆண்டோ ப்ருனோ ,யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கோ .கருணாநிதி
45. தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம் --திமுக மாநில கொள்கை பரப்பு செயலர் திருச்சி .என்.சிவா .M.P
வாசகர் வட்டத்தால் பாராட்டப்பட்டவர்கள்
1 .பெரியார் பெருந்தொண்டர்கள்2 .வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திரசேகரன்
3 .பத்திரிக்கை முகவர் ரகோத்தமன்
4 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி
5 .அரிமா .முத்து .சந்திரசேகரன் CAK பெட்ரோலியம்
6 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வரதராசன்
7 .அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன்
8 .மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன்
9 .சங்கர் IAS அகடமியின் நிறுவனர் சங்கர்
10 வித்யா மந்திர் கல்லூரியின் முதல்வர் .க.அருள்
11 தேசிய விருது பெற்ற ஒளிபதிவாளர் கோ.முரளி
12 மருத்துவர் .கொ.மாரிமுத்து
13 .கவிஞர் .சாகுல் அமீத்
14 மருத்துவர் வெ.தேவராசு
.15 .ஓடிஸா மாநில சார் ஆட்சியர் மரு.பிருந்தா
16 நகரின் மூத்த திராவிட இயக்க உறுப்பினர் வ.சாமிநாதன்
17 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் மாரிசெட்டி
18 வடஅமரிக்க தமிழ்சங்கத் தலைவர் தண்டபானிகுப்புசாமி
19 நரிக்குறவர் இனத்திலிருந்து மருத்துவம் பயில தேந்தெடுக்கப் பட்ட முதல் மாணவர் ராஜ பாண்டி
20 உலக தமிழ்க் கவிஞர் பேரவையின் அமைப்பாளர் .கவி .செங்குட்டுவன்
21 நல்லாசிரியர் விருது பெற்ற மு.இந்திராகாந்தி
22 நல்லாசிரியர் விருது பெற்ற பெ.ராசேந்திரன்
23சாதி மறுப்பு மணம் செய்து கொண்ட தம்பதியினர்
24.வரதராசுலு ஆசிரியர்
25.தமிழுக்கு தொண்டாற்றி பணி நிறைவு செய்த தமிழாசிரியர்கள்
26.ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம்
27..மூத்ததிராவிட இயக்க உறுப்பினர் மயிலேரி.கா .சண்முகம்
28.கணினி நூலக புரவலர் வே.செல்வராஜ்
வாசகர் வட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட படங்கள்
1.தந்தை பெரியார்
2.புரட்சிகவிஞர் பாரதிதாசன்
3.பேரறிஞர் அண்ணா
4.அன்னை மணியம்மையார்
5.அண்ணல் அம்பேத்கார்
6.சேகுவேரா
7.சுயமரியாதை சுடரொளிகள்
8.பச்சைத் தமிழன் காமராசர்
9.நடிகவேள் எம்.ஆர் .இராதா
10.இராமலிங்க அடிகளார்
11.கலைவாணர் .என்.எஸ் .கே
12.சமூகநீதி காவலர் விபிசிங்
13 மொழிபோர்த்தியாகிகள்
14 விஞ்ஞானி ஜி .டி.நாயுடு
15.திராவிட இயக்க வீராங்கனைகள்
16.டாக்டர் சி.நடேசனார்
17.டி .எ .மதுரம்
18.தவத்திரு குன்றக்குடி அடிகளார்
19.மறைமலை அடிகள்
20 திரு .வி.க\
21.இரட்டைமலை சீனிவாசன்
22.கல்வியாளர் நெ.து .சு
23.கி ஆ பெ விசுவநாதன்
24 .மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்
25.தோழர் ஜீவானந்தம்
26.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
27.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
28.அயோத்திதாச பண்டிதர்
29.டி .என் ராஜரத்தினம் பிள்ளை
30.பன்மொழிப் புலவர் அப்பாதுரையார்
31.டாக்டர் ஆபிரகாம் கோவூர்
32.டாக்டர் நரேந்திர தபோல்கர்
33.இன உரிமை போராளி நெல்சன் மண்டேலா
34.பகுத்தறிவு கலைஞர் காகா இராதாகிருஷ்ணன்
35.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
36. திராவிடர் மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்
37.தியாகசீலர் கக்கன்
38.கன்னட எழுத்தாளர் யு.ஆர் .அனந்தமூர்த்தி
வாசகர் வட்டத்தில் கருத்துரையாற்ற அளிக்கப்பட்ட தலைப்புகள்
1.தமிழர் வாழ்வில் விடுதலை
2.நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தமிழ் புத்தாண்டும்
3.இதயம் காப்போம்
4.பெண்ணியம் வென்றதும் வெல்லவெண்டியதும்
5.நம்மால் முடியும்
6.விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள்
7.திராவிடர் இயக்கத்தின் நோக்கமும் தாக்கமும்
8.பெரியாரும் காமராஜரும்
9.இணையம் கற்போம்
10.பெரியாரின் தேவை
11.பெரியாரும் பெண் விடுதலையும்
12.ஊடகங்களை புரிந்து கொள்வோம்
13.தமிழ்நாடும் மூடநம்பிக்கையும்
14.தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
15.தமிழின் தொன்மையும் பெருமையும்
16.தந்தையே தா உன் கைத்தடி
17.திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ?
18 சிரிக்கத்தானே இந்த நேரம்
19.சமத்துவ சிந்தனைகள்
20.பெரியாரும் பெருந்தலைவரும்
21.யார் மனிதன்
22.பெரியார் எனும் உயிராயுதம்
23.கல்விப் பணியில் நெதுசுவும் பகுத்தறிவும்
24.ஜாதி என்னும் சதி
25 மதம் மனிதம் மகாத்மா
26 தமிழ் இலக்கியங்களும் அறியப்படாத செய்திகளும்
27.''ஊடகங்களில் வர்ண பேதமும் பாலியலில் வர்க்க பேதமும் ''
28 பெரியார் வழியில் பாரதிதாசன்
29.பெரியார் அம்பேத்கார் கொள்கைகளில் ஜாதி ஒழிப்பு
30.மானமிகு சுயமரியாதை
31.தி கிங் மேக்கர் காமராஜ்
32.'அழிந்து வரும் இயற்கை விவசாயமும் தலைகுனியும் நவீன விவசாயமும் '
33.பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே
34.திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும் நம் கடமையும்
35.என் தந்தை கலைவாணர்
36. தமிழும் திராவிடமும்
37.ஆப்ரிக்காவில் பெரியார்
38.தமிழ் =உயிர்நேயம்
39.காலத்தை வென்ற காமராஜர்
40.மருத்துவம் எதிர்நோக்கும் சவால்களும் மாணவர்களின் கடமையும்
41.கல்வி -வேலைவாய்ப்பு -சமூகநீதி
42.தென்றலும் புயலும்
விடுதலை வாசகர் வட்ட அவசியத்தை எல்லோரும் உணர வேண்டும் !-திருச்சி .என் .சிவா
திராவிடர் இயக்கம் இல்லை என்றால் இங்கு பலருக்கு நாக்கே இருந்திருக்காது !-திருச்சி .என் .சிவா
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 45 ஆம் நிகழ்வான தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி .என் .சிவா அவர்கள் ஆற்றிய உரை
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கின்ற மேனால் திமுக மாவட்ட செயலர் சென்னகேசவன் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மூலம் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றுள்ளேன் .நீண்ட தொலைவு பயணம் .ஒரு பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து கருத்துக்களை சொல்ல வேண்டிய நேரத்தில் உணர்வாளர்களை ஓர் அரங்கத்தில் சந்தித்து நம்மை நாமே புதுப்பித்து கொள்கிற ,கூர்தீட்டி கொள்கிற ஒரு சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய காரணமாக இருந்த ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் தென்றலும் புயலும் என்கிற தலைப்பில் ஊரையாற்ற உள்ளேன் என்ற போது இங்கே உரையாற்றியவர்கள் தென்றலாக அண்ணாவையும் புயலாக தந்தை பெரியாரையும் உருவகப்படுத்தி உரையாற்ற போகிறேன் என்று சொன்னார்கள் .தலைப்பை பார்த்தவுடன் இதைத் தான் பேசப்போகிறார் என்று சொல்லும் ஆற்றல் நம் கழகத் தோழர்கட்கு தான் உண்டு
இங்கு எனக்கு முன்னாள் உணர்ச்சி பொங்க உரையாற்றிய திமுக மாவட்ட செயலாளர் ஆதங்கத்துடன் சில கருத்துக்களை இங்கே பதிவு செய்தார்கள் அவருடைய உணர்வுகளில் நானும் உடன்படுகிறேன் ஒரே ஒரு அவரது கருத்தில் மாறுபடுகிறேன் .நம்முடைய பயணத்தில் ,கொள்கையை எடுத்து செல்வதில் நாம் தோற்றுவிட்டோம் என்பதை இங்கே சொன்னார் ஒரு வேளை அவர் சொன்னது போல் தோல்வி அடைந்திருந்தால் இந்த இடத்தில் விடுதலை வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்று இருக்காது .என் பெயருக்கு பின்னால் M A B L பட்டம் இருந்திருக்காது .நாடாளுமன்ற கட்டிடத்தை படத்தில் தான் பார்த்திருக்க முடியுமே தவிர அதன் உள்ளே சென்று குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது .கடற்கரை வழியாக நடந்து சென்றிருக்கலாமே தவிர செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டம் இயற்றும் உறுப்பினராய் இருந்திருக்க முடியாது .எதிரில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணி மருத்துவர் ,ஒரு இளைஞர் முனைவர் ,,முன்னாள்,இன்னாள் என பல பொறுப்புக்களில் இருக்கிறோம் என்று சொன்னால் இவையெல்லாம் இந்த இயக்கத்தின் வெற்றிப் பாதையின் படிக்கட்டுக்கள் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன் இந்த கொள்கைகளும் உணர்வுகளும் இன்னும் பரவலாக்கப்படவேண்டும் என்பது அவசியம் .இந்த தலைமுறை உணராமல் இருக்கிறார்களே என்பதை நாம் உணரவேண்டியது அவசியம் .ஒரு தேர்தலையும் அதன் வெற்றியையும் குறிகோளாகக் கொண்டு நாம் நமது பயணத்தை திசைமாற்றும் போது சில கொள்கைகளை எடுத்து செல்கிற கடமையில் இருந்து பின்தங்கி விடுகிற அபாயமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இரண்டையும் ஒன்றாக சேர்ந்து எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது .நாம் இருந்ததும் பின்னர் அதை இழந்ததும் ,இழந்ததை மீண்டும் பெற்றதும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்வும் யாரால் பெற்றது என்று அறியாத ஒரு தலைமுறை வளர்ந்து நிற்கிற காரணத்தால் தான் நடக்க கூடாதது எல்லாம் நடக்கிறது .
வாசகர் வட்டத்தின் நோக்கம் தெரிந்தவர்களை அழைத்து கொண்டு வந்து தான் பேசுகிறோம் இந்த கருத்துக்களை அறிந்தவர்கள் மத்தியில் பேசுவதால் என்ன பயன் என்று கேட்கலாம் . வேகம் வேகம் பெற கருத்துக்களுக்கு வலிமை கூடும் ,விழிப்புணர்ச்சி அதிகரிக்கும் .விழிப்புணர்ச்சி அதிகரித்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் .விழிப்புணர்ச்சி இல்லாதபோது தான் விபத்துக்களும் விரும்பதகாதவைகளும் நடக்கின்றன .என்கிற போது நானும் விரும்பித்தான் இங்கு உரையாற்ற வந்துள்ளேன் . ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் உரையாற்றும்போது நானும் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன் என்ற உணர்வு .
தம்பி பிரபு அவர்கள் திருச்சியில் படித்ததாக ,நான் மாணவரணியில் பணியாற்றிய போது என் உரைகளை கேட்டதாக ,தம்பி இராஜேந்திரன் அவர்கள் என்னோடு மாணவரணியில் இணைந்து பணியாற்றியவர் இங்கு இருக்கிற பல இளைஞர்கள் ,இந்த பகுதி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஜி .சுகவனம் என்னோடு இளைஞரணியில் பணியாற்றியவர் ஒரு தலைமுறையை உருவாக்கினோம் ..அந்த தலைமுறை அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது தான் கேள்வி .விடுதலை வாசகர் வட்டம் செய்கின்ற காரியத்தை வெளியில் இருக்கின்ற நாமும் செய்திட வேண்டும் .இதன் அவசியத்தை நாம் உணரவேண்டும்
இந்த மண்ணில் தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,டாக்டர் கலைஞர் தோன்றிருக்காவிட்டால் நாம் யாராக இருந்திருப்போம் ,நம் நிலை என்ன என்று சிந்திந்து பார்க்கவேண்டும் .சென்னையில் ஒரு கருத்தரங்கிற்கு என்னை அழைத்து ஒரு பொது தலைப்பின் கீழ் மூன்று பேர் உரையாற்ற வேண்டும் என்றார்கள் ,நான் கொடுத்த தலைப்பு திராவிடர் இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் ..என்பது பொது தலைப்பு தமிழ்நாட்டின் நிலை ,தமிழ்மொழியின் நிலை ,தமிழர் நிலை ,என்பது துணை தலைப்புக்கள் ,திராவிடர் இயக்கம் தோன்றிருக்காவிட்டால் இனத்தின் ,மொழியின் ,நாட்டின் ,நிலை என்னவாகியிருக்கும் என்கிற சிந்தனையை உருவாக்கவேண்டும் .ஒருவரை சாடி நம் பக்கம் திருப்புவதை விட அவர்களுக்கு புரியவைத்து நம் பக்கம் திருப்புவதை மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்
இது மாலை நேரத்துக் கல்லூரி என்றார்கள் .இது மட்டும் அல்ல அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் கூட அப்படித்தான் நடைபெற்றது .உலக வரலாற்றை சொன்னோம் ,உலகத்தின் சரித்திரத்தை புரட்டி போட்ட புரட்சிகளை பற்றி சொன்னோம்.உலகத் தலைவர்கள் பற்றி சொன்னோம் ,உலகத்தில் வாழ்ந்த இனம் ,நாம் வாழ்ந்த நிலை அறியாமல் அடிமையாய் வாழ்கிறோமே போன்றவற்றை எல்லாம் முதன்முதலாய் பொதுக்கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் சொன்ன இயக்கம் திராவிடர் இயக்கம் என்கிற பெருமை நமக்கு உண்டு
உரையின் மைய பகுதிக்கு செல்வதற்கு முன்பு ஒன்றை சுட்டி காட்ட விரும்புகிறேன் .வாசகர் வட்டம் நடத்துகிற கூட்டம் உணர்வாளர்களால் தான் கூடி இருக்கிறீர்கள் .ஆனால் .உரையாற்ற வந்த எனக்கு நீங்கள் அணிவித்தவை எதற்கும் பயன்படாத சால்வைகளை அணிவித்திருக்கிறீர்கள்.பாட்டா
பெரியாரை தெரியாமலா நாம் இருக்கிறோம் ?பெரியார் இல்லாவிட்டால் தமிழ் சமுகத்தில் உயர்வு என்பதே இல்லை .இந்த இயக்கம் இல்லாவிட்டால் இன்றைக்கு பெண்கள் நாற்காளிகளில் அமர்ந்திருக்க முடியாது .பெண்களை வெளியே வராதே என்றார்கள் வெளியே வரவழைத்தோம் .கல்வி சாலையில் அனுமதி இல்லை என்றார்கள் கல்வி கொடுத்தோம் வேலை வாய்ப்பில் அனுமதி இல்லை என்றார்கள் உனக்கு தான் முன்னுரிமை என்று வேலை வாய்ப்பு வழங்கினோம் .மன்றத்தில் அனுமதி இல்லை என்றார்கள் மன்றத்தின் உள்ளே வரவழைத்து மேடையில் சரிநிகர் சமானமாய் அமர்வதற்கு காரணம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணா அவர்களும் தான் .இதுவெல்லாம் முன்னேற்றங்கள் .இதில் இடையில் சில பேர் பழுத்த கனிகளை சுவைத்து விட்டு போகலாம் .ஆனால் மரம் நம்முடையது , வேர் நம்முடையது கிளைகள் நம்முடையது .அடித்தும் விரட்டலாம் ,முறைத்தும் விரட்டலாம் ,நாளை இந்த பக்கம் வராமலேயே செய்யலாம் எதுவும் நம் கைகளில் தான் உள்ளது . ஆனால் மரத்தின் வேர் பட்டு போகாமல் பாதுக்காக்க வேண்டும் .
திராவிடர் கழகம் ,திராவிடர் முன்னேற்ற கழகம் ,திராவிடர் இயக்கம் என்று சொல்கிற போது சொல்லுபோதே ஒரு உணர்ச்சி .அந்த நாட்களில் இவன் கழகத்தை சார்ந்தவன் என்று அறிமுகப்படுத்துவார்கள் .முன்னேற்ற கழகத்தை சார்ந்தவன் என்பார்கள் ,திராவிடர் என்று சொல்கிறபோதே ஒரு உணர்வு வரும் .என்ன காரணம் நீதிக்கட்சி திராவிடர் கழகமாய் மாறி அதிலிருந்து திராவிடர் முன்னேற்ற கழகம் உருவாகி சரித்திர மாற்றம் ஏற்பட்டது .நீதிக்கட்சி என்பது என்ன ?பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து பார்ப்பனால்லாதாரை விடுவிக்க தோன்றிய இயக்கம் தான் நீதிக்கட்சி .குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் தங்களிடம் இருந்த கல்வி என்ற தகுதியால் மற்றவர்களிடம் இருந்து எல்லா நிலைகளிலும் உயர்த்தி கொண்டபோது இங்கே பெருமான்மையான மக்கள் அறிவு இருந்தும் தகுதி இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கல்வி ,வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்களே அவர்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் தான் நீதிக்கட்சி .அதே போல வைதீக ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக உருவான இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம் .இந்த இரண்டும் சேர்ந்து உருவானது தான் திராவிடர் கழகம் .ஏன் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது தெரியுமா ? தமிழன் என்று சொல்வதற்கும் திராவிடன் என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு ?தமிழன் என்று சொன்னால் பெருமையாக இருக்கிறது ,திராவிடன் என்று சொன்னால் உரிமை தானாக வருகிறது .தமிழன் என்ற சொல் பார்ப்பனன் என்ற சொல்லை விளக்காத சொல் ,திராவிடன் என்ற சொல் பார்ப்பனன் என்ற சொல்லை விளக்கிய சொல் .ஒரு இனத்தை சார்ந்தவனை எதிர்ப்பதல்ல .நம்மை ஆதிக்கம் செய்தவனிடத்தில் இருந்து விடுதலை அடைகிறோம் என்கிற அறிவிப்பு .
இங்கே எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் பெரியார் நாத்திக கொள்கை பேசிய தலைவராகவே அறியப்பட்டிருக்கிறார் என்றார்கள் ,பெரியார் ஏன் நாத்திக கொள்கையை பேசினார் ,ஒரு காலம் வந்தது அவர் பேச்சின் அணுகுமுறை மாறியது .இன்றைக்கு நான் திறந்து வைத்த படம் கன்னட எழுத்தாளர் யு.ஆர் .அனந்தமூர்த்தி .கன்னட எழுத்தாளருக்கு தமிழ்நாட்டில் ஏன் படம் திறக்கவேண்டும் என்று சிலர் எண்ணலாம்.அவர் எந்த மொழியை சார்ந்தவர் என்பதல்ல.அவர் எந்த கருத்தை சொன்னார் என்று தான் பார்க்க வேண்டும் .முற்போக்கு கருத்தை சொல்கிறவர் கன்னட நாட்டில் பிறந்தால் என்ன ? மாராட்டியத்தில் பிறந்த பூலேவாக இருந்தால் என்ன ?உத்திரபிரதேசத்தில் பிறந்த லோகியாவாக இருந்தால் என்ன ? எல்லோரையும் உயர்த்தி பேசுகிற இயக்கம் நம்முடைய இயக்கம் . யு.ஆர் .அனந்தமூர்த்தி படத்தை திறந்து வைக்கிறோம் அவருடைய கொள்கைகளை குறித்து பேசுகிறோம் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அனந்தமூர்த்தி பற்றி குறிப்பிடும்போது அவர் உயர்ஜாதியில் பிறந்திருந்தாலும் சனாதன தர்மத்தை எதிர்த்தவர் என்று குறிப்பிடுகிறார் .நான் இன்னமும் நினைவுட்டுகிறேன் நமக்கு வகுப்புவாரி உரிமையை பெற்று தந்த மூதறிஞர் என்றழைக்கப்படும் முத்தையா முதலியார் உயர்சாதியை சார்ந்தவர் தான் .மண்டல் கமிசன் மூலம் மத்திய அரசில் 27 சதவீத இட ஒதுக்கீடு தந்த வி.பி சிங் உயர் சாதி சார்ந்தவர்தான் .நமக்காக முன் வந்த தலைவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் .பெரியார் சராசரி மனிதராக ,ஒரு வியாபார குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட பின் நாட்களில் ஏன் அவரிடம் மாற்றம் வந்தது அவருடைய கொள்கைகள் வலிமை பெற்றது என்பதை பார்ப்போம்
முதன் முதலாய் விவரம் தெரிந்து நான் கேட்ட பொதுக்கூட்டமே தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்டம் தான் .நான் பள்ளி செல்லும் காலங்களில் அவர் கூட்டத்தை கேட்கிற வாய்ப்பை பெற்றேன் .பின் நாட்களில் அவருடன் நின்று கொண்டு பேசும் வாய்ப்பையும் பெற்றேன் .உட்கார் என்பார் ஆனால் நின்று கொண்டே பேசுவேன் .என் வாழ்வில் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்று அவருடன் நின்று பேசி அளவளாவியது .பெரியார் அவர்கள் உரையாற்றும் நான் கண்ட முதல் கூட்டம் ஒரு மூலையில் நின்று பள்ளி மாணவனாக கேட்டு கொண்டிருந்தேன் . அய்யா பேச ஆரம்பிக்கிறார் ‘’கூட்டத்தின் தலைவர் அவர்களே ! கூட்டத்தின் பொறுப்பாளர்கள் பெயரை எல்லாம் சொல்லி விட்டு பெரியோர்களே ! தாய்மார்களே !என்று சொல்லி ,தவறான தொழிலில் ஈடுபடும் பெண்ணை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ அந்த பெயரை சொல்லி அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே ! என்றார் .நான் அந்த சொல்லை இங்கு பயன் படுத்த முடியாது .பெரியார் சொன்ன சொல்லை திருப்பி சொல்லும் துணிவு கூட நமக்கு இல்லை .ஆனால் எங்கும் உரத்து ஒலிக்கிற துணிச்சல் அவருக்கு இருந்தது .எனக்கு அதிர்ச்சி ! கூட்டம் கேட்க வந்தவனை பார்த்து அவன் தாயை இவர் விமர்சிகிறாரே என்று நினைத்த போது அடுத்த வார்த்தை அங்கிருந்து வந்தது என்ன ரோஷம் வருகிறதா ? என்று என் மனதை படித்து போல் கேட்டார் .’’நான் சொல்கிறபோது உனக்கு ரோஷம் வருகிறதே காலம் காலமாய் உன்னை சூத்திரன் என்று அழைத்தானே அதற்க்கு பொருளே அது தானடா ‘’ என்றார் .அப்போது தான் உரைத்தது .பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் சூத்திரன் என்று சொல்வார்கள் .புலால் உண்பவனை சொல்கிறார்கள் என்கிற நிலை மாறி பெற்ற தாயை இழிவாக சொல்கிற சொல்ல என்று உணர்ந்து அவர் உரையை முழுமையாக கேட்டேன் .பின் நாட்களில் நான் படித்த கல்லூரிக்கு வந்தார் .கிண்டலாக பேசுவார் ,அதே நேரத்தில் அருமையான கருத்துக்களை எல்லாம் சொல்வார்.’’என்னடா அக்னி பகவான் என்று கும்பிடுகிறாய் உன் அக்னி பகவான் யார் தெரியுமா ? நான் 5 காசு கொடுத்து தீப்பெட்டி வாங்கினால் உன் அக்னி பகவான் என் அடிமை .உன் வாயு பகவான் நான் மூன்று ருபாய் கொடுத்தால் எனக்கு வியர்வை வந்தால் என் தலை மேல் மின் விசிறியாய் சுழலுவான்.என்று பேசினார் .கடவுளாக வர்ணிக்கப்பட்டவர்களை இப்படி அய்யா பேசிய போது புதுமையாக இருந்தது .அவருடைய கருத்துக்களை ஏற்க்காதவர்களும் ரசிக்கும் வண்ணம் அவரது உரை இருந்தது .ஆனால் அடிப்படை நோக்கம் என்ன ? ஒடுக்கப்பட்டவன் முன்னேறவேண்டும் என்பது தான் அய்யாவின் நோக்கம்
இங்கே முன்னாள் பேசியவர்கள் சொன்னார்கள் அய்யா கடவுள் இல்லை என்றார் என்று ஏன் அய்யா கடவுள் இல்லை என்றார் .கடவுளிடம் வரம் கேட்டு கிடைக்காத காரணத்தினாலா ? அவரின் வேண்டுகோள் நிறைவேற்றபடவில்லை என்பதினாலா ? இல்லை அய்யா மிக ஆழமாக யோசித்தார் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மனிதன் ஏற்ற தாழ்வில் உள்ளான் .பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் ஜாதியால் தீர்மானிக்கப்படுகிறான் .அந்த ஜாதிக்கு காவலாக மதங்கள் இருக்கின்றன ,மதங்களுக்கு காவலாக கடவுள்கள் இருக்கின்றன .ஆகவே ஆணிவேரை அழிக்கவேண்டும் .கடவுள் இல்லை என்றால் மதம் இல்லை .மதம் இல்லை என்றால் ஜாதி இல்லை .ஜாதி இல்லை என்றால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு இல்லை என்பதற்காக அய்யா கடவுள் இல்லை என்றார் .
ஆலயங்கள் கூடாது என்கிறீர்கள் பின் எதற்காக ஆதிதிராவிடர்களின் ஆலயபிரவேசம் என்று கேட்டார்கள் சரியான கேள்விதான் .அய்யா சொன்னார் ஆலயம் என்கிற அமைப்பு இருக்கும் வரை நம்பிக்கையாளர்கள் இருக்கும் வரை உள்ளே சென்று வழிபடும் உரிமை வேண்டும் என்று தான் கேட்கிறேன் நான் பகுத்தறிவை ஊட்ட முயற்சிக்கிறேன் .என் கருத்தை அவன் ஏற்கவேண்டும் என்பது கட்டாயமில்லை என்றார் .எல்லா கூட்டங்களிலும் சொல்வர் ‘’நான் சொல்வதை நீங்கள் அப்படியே ஏற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை யோசித்து பாருங்கள் ,சரி என்று பட்டால் என் பின்னால் வாருங்கள்’’ என்றார்.இப்படி பேசிய ஒரே தலைவர் சாகரடீசுகு பின்னல் தந்தை பெரியார் ஒருவர் தான் .மிக கூர்ந்து பார்க்கும்போது முரட்டு தனமான கருத்து என்று சொல்லப்பட்டதின் பின்னால் ஒரு தத்துவம் இருந்தது .ஒரு இனத்தின் விடுதலை இருந்தது .
ஒரு நூற்றாண்டு காலமாக இவனுக்கு கல்வி கற்க தகுதியே இல்லை ஒதுக்கியே வைத்திருந்த நிலையில் ,அதை தானே மனுதர்மம் சொன்னது ,இவனுடைய கல்வியை காதால் கேட்டாலே குற்றம் என்று சட்ட ரீதியாக அமுல் படுத்தினார்களே காதால் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்று ,வேதம் படித்தால் நாக்கை அறு என்று சட்டத்தில் எழுதி வைத்தார்களே வாசகர் வட்ட உறுப்பினர் சேர்க்கையின் போது மற்றவர்களை பார்த்து சொல்லுங்கள் இந்த இயக்கம் மட்டும் இல்லையென்றால் இங்கு பல பேருக்கு பேசுவதற்கு நாக்கே இருந்திருக்காது .இன்றைக்கு பேசுகிறோம் தாய்மொழியில் பேசுகிறோம் பல மொழியில் பேசுகிறோம் கல்வி கற்றிருக்கிறோம் பட்டம் பெற்றிருக்கிறோம் நம் பிள்ளைகள் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள் இவை எல்லாம் இந்த இயக்கம் தோன்றியதற்கு பின்னால் தான் என்கிற விழிப்புணர்ச்சி தான் இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்
இன்னமும் சொல்வேன் எதிரில் ஒரு மருத்துவர் அமர்ந்திருக்கிறார் ,மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ திராவிடர் கழகத் தோழர்கள் அறிவார்கள் .விசித்திரமான செய்தி அல்ல ஆனால் விநோதமானது .என் மகளும் ஒரு மருத்துவர் தான் .இந்த நாட்டில் மருத்துவம் படிக்கவேண்டும் என்றால் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,அப்புறம் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அப்புறம் ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும் .ஆனால் ஒரு காலத்தில் ஒரு ஆணோ ,பெண்ணோ மருத்துவம் படிக்கவேண்டும் என்றால் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டும் போதாதது அவர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் .சமஸ்கிருதத்திற்கும் மருத்துவ படிப்பிற்கும் என்ன சம்பந்தம் ?சம்பந்தம் ஒன்றும் அல்ல அது சதி வலையின் தொடர்ச்சி .சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவர்களாக அதை தெரியாதவர்கள் நோயாளிகளாக ,மருத்துவ உதவியாளர்களாக இருந்த சதியை உடைத்து தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்று சட்டம் கொண்டு வந்தது நம் பாட்டன் நீதிக்கட்சி ஆட்சியில் தான் .இல்லாவிட்டால் இத்தனைM.B.B.S.,யும் M.S,ம் M.D.,யும் F.R.C.S யும் இந்த நாட்டில் உலா வருமா ?இவற்றையெல்லாம் தெரியாமலே ஒரு தலைமுறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது .
நம்முடைய பயணத்தில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் .ஆனால் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது .இன்றைக்கு என்னோடு இருக்கும் நண்பர்கள் ,பல ஆண்டுகாலமாய் உடனிருக்கும் தோழர்கள் என்ன ஜாதி என்று தெரியாமல் பழகும் உணர்வை கற்று தந்து தந்தை பெரியார் என்பதை நன்றியுணர்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன் .ஜாதியை பார்க்காதே ! மனிதனை பார் ! எல்லோரும் ஓர் குலம்! என்று திருவள்ளுவர் காலத்திலிருந்து சொன்ன சமுகம் நம் சமுகம் என்றால் அது தலை நிமிர்ந்து நின்றது நூறாண்டுகளுக்கு முன்னால் அதுவும் இந்த இயக்கம் தோன்றியதற்கு பின்னால் ,இந்த தலைவர்கள் நடமாடியதற்கு பின்னால் ,பல பேர் தங்கள் வாழ்வை இழந்ததற்கு பின்னால் ,பல பேர் தங்கள் வசந்தங்களை பலி கொடுத்ததற்கு பின்னால் ,என்று நினைவு கூர்கிறபோது இது இரண்டு தலைவர்களின் பிறந்த நாள் விழா அல்ல இந்த இரு பெரும் தலைவர்களுக்கு நன்றி செலுத்த கூடியுள்ள கூட்டம் இது .
பெரியார் ,அண்ணா ,கலைஞர் என்பது பெயர்கள் அல்ல ,அவை சமுக புரட்சியின் அடித்தளம் ,இது வாழையடி வாழையாக தொய்வின்றி பயணத்தை தொடர்கின்ற இயக்கம் .இந்த இயக்கத்தின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணம் இந்த இயக்கத்திற்கு தலைமை பற்றாக்குறை கிடையாது .ஒருவர் சிறையில் இருந்தார் தத்தளித்து தடுமாறி நின்றார்கள் ,வழிகாட்ட ஆள் இல்லை ஆனால் நம்முடைய இயக்கத்தில் எங்கு பார்த்தாலும் தலைவர்கள் தான் .பயிற்சி பெற்ற இயக்கமாக இருக்கிறது .
ஒரு காலத்தில் அண்ணா தம்பிக்கு என்று கடிதம் எழுதினார்.உலக வரலாற்றை தன் தம்பிக்கு எடுத்து சொன்னார் . நாடாளுமன்றதிறக்கு போகும் போது அண்ணா சொல்கிறார் நான் நாடாளுமன்றம் போகிறேன் தம்பி ! உன்னை விட்டு செல்கிறேன் என்பது தான் கவலை என்று சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்ததை விட டெல்லியில் வரவேற்ப்பு இருந்தது ,ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று தான் எண்ணி இருந்தேன் ஆனால் என்னை மதிக்க கூடியவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள் என்று சொன்னார் .அதே அண்ணா கைதி எண் 6342 என்கிற புத்தகத்தில் காலையில் கண் விழித்ததில் இருந்து மாலை வரை என்ன நடக்கிறது என்று எழுதிக்கொண்டே வந்து ஒரு இடத்தில் என்ன தம்பி யோசிக்கிறாய் ? அவனவனுக்கு அண்ணனாக பிறந்தவன் பாரிசுக்கு சென்றேன் ,மாஸ்கோவுக்கு சென்றேன் என்றெல்லாம் தான் எழுதுவார்கள் உனக்கு கிடைத்த அண்ணனை பார்த்தாயா சிறைக்கு போனேன் காலையில் கஞ்சிக்கு வரிசையில் நின்றேன் என்று எழுதுகிறேன் என்ன செய்வது தம்பி நம் இனத்தின் நிலை அதுவாகிவிட்ட காரணத்தினால்! என்று எழுதினார்.இப்படி தொண்டனுக்கு தம்பி என்று அழைத்து இனத்தின் நிலையை எடுத்து சொன்ன அண்ணா என்கிற மாபெரும் தலைவன் ,அவரை தொடர்ந்து கலைஞர் எழுதும் கடிதங்கள் உணர்வுகளை மட்டுமல்ல எல்லா விதமான செய்திகளையும் தருகிறது ,போராடுகிற வலிமையை தருகிறது .என் இலக்கு என்பது சாதாரண இடத்தை அடைவது அல்ல .அதன் முலம் ஆதாயம் பெறுவதல்ல ,அதிகாரத்தை பெறுவதற்காக எதையும் இழப்பதல்ல ,சுயமரியாதையை இழக்காமல் இனத்தை வாழ வைக்க வேண்டும் என்கிற உணர்வை தருகிற இயக்கம் இந்த இயக்கம் !
பெரியார் சொன்ன இந்த கருத்துக்களை முதன் முதலில் பெரியார் ஒருவர் மட்டும் தான் சொன்னாரா ?சமத்துவ கருத்துக்களை ,புரட்சிக்கான குரலை முதலில் பெரியார் தான் ஒலித்தாரா ? என்றால் இல்லை .மாறுபட்டு பேசுகிறேன் என்று ஆச்சரியமாக இருக்கும் .பெரியார் சொன்ன இதே கருத்தை அவருக்கு முன்னால் வள்ளலார் சொன்னார் வள்ளலாருக்கு முன்னால் புத்தர் சொன்னார் .ஆனால் வள்ளலார் என்ன ஆனார் என்று யோசியுங்கள் அய்யா தந்தை பெரியார் அவர் பாணியிலேயே கூட்டங்களில் பேசினார் ''என்னை மாதிரி இராமலிங்கம் ஒருத்தன் பேசினான் அவனை கொன்னு போட்டுட்டனுங்க ''என்பார் பெரியார் சொன்னதை தான் வள்ளலாரும் சொன்னார் ஆனால் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று தோற்று போனார் .புத்தனை சீனா ஏற்றுகொண்டது ,ஜப்பான் ஏற்றுகொண்டது,கொடுங்கோலர்கள் வாழ்கிற இலங்கை ஏற்றுகொண்டது ஆனால் பிறந்த நாடான இந்தியாவில் புத்தர் தோற்று போனார்.புத்தர் வள்ளலார் தோற்ற மண்ணில் பெரியார் மட்டும் வெற்றி பெற்றார் என்றால் அண்ணா போல் ஒரு தளபதி கிடைத்தததால் தான் !
நீதிக்கட்சி ,சுயமரியாதை இயக்கம் ,திராவிடர் கழகம் கொள்கைகள் அரசியல் சட்டமாக்க திராவிடர் முன்னேற்ற கழகம் கண்டார் அண்ணா .காரல் மார்க்ஸ் சொல்வார் அதிகாரம் எந்த வர்கத்தின் கையில் இருக்கிறதோ அந்த வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் அந்த அதிகாரம் செயல்படும் எனவே அதிகாரம் தொழிலாளர் வர்க்கத்திற்கு வந்தால் தான் தொழிலாளர் வர்க்கம் உயர்வடையும் என்றார் ,அதனால் தான் அதிகாரம் நம் கையில் வர வேண்டும் என்று நினைத்து தனி இயக்கம் கண்டார்
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் என்ன வேறுபாடு ?பெரியார் புயலை போல் வந்தார் மாற்றங்கள் உருவானது ,அண்ணா தென்றலைப்போல் தவழ்ந்தார் நந்தவனத்தில் பூஞ்சோலைகள் மலர்ந்தன . அய்யாவிற்கும் அண்ணாவிற்கும் உள்ள வேறுபாட்டை ஒரு சிறிய உதாரணத்தின் முலம் விளக்குகிறேன் .ஒரு முறை காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் அய்யா கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்று பேசுகிறபோது கூட்டத்திலிருந்து சிலர் கல் எரிகின்றனர் ,யாருக்காக அய்யா பேசுகிறாரோ அவர்களே ஆதிக்க சக்திகளின் தூண்டுதலில் கல் எறிகிறார்கள் .கூட்டத்தில் கலவரம் .கூட்டம்கலைந்து போகிறது ,மறுநாள் அதே இடத்தில் அதே மேடையில் நாடகம் ஒன்று நடைபெறுகிறது .அண்ணா அவர்களே ஜமீன்தாராக நடிக்கிறார் கால் மீது கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருப்பார் .வேலையாள் உள்ளே வருவார் ,ஜமீன்தாரான அண்ணா கேட்பார் ''என்னப்பா நாலு நாட்களாக ஆளே காணவில்லை சொல்லாமல் எங்கே போனாய் ?"வேலையாள் பணிவுடன் ''அய்யா மன்னியுங்கள் தில்லையில் ஒற்றை காலில் நடனம் புரிந்தவாறு உள்ள நடராஜரை தரிசிக்க சென்றேன் ''என்பான். ஜமீன்தாரான அண்ணா கேட்பார் ''எங்கே உன் நடராஜர் நின்றதை போல் நின்று காட்டு நானும் தரிசித்து கொள்கிறேன் ''என்பார் .வேலையாளும் சில நிமிடங்கள் நின்று காட்டிவிட்டு ''அய்யா போதுமா கால் வலிக்கிறது ''என்பான் ,உடனே அண்ணாவோ ''இன்னும் கொஞ்சம் நேரம் நில் உன் நடராஜர் எத்தனை காலம் நிற்கிறார் உன்னால் முடியாதா ?என்று கேட்க வேலையாளோ ''அய்யா அது கல் நான் மனிதன் "என்று சொல்ல கூட்டத்திலிருந்து அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.அடுத்த நாள் அய்யா பெரியாரிடம் போய் சொன்னார்கள் நீங்கள் கடவுள் இல்லை என்றபோது கல்லால் அடித்தான் .அண்ணா நாடகம் போட்டு சொல்லும்போது கைத்தட்டுகிறான் என்ற போது அய்யா சொன்னார் ''இத்தனை நாள் இந்த மக்களை முட்டாள்கள் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன் அடிமுட்டாள்கள் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் '' என்றாராம்
பெரியார் கொடுத்த கசப்பு மருந்து தான் இந்த சமுதாய நோய்க்கு தீர்வு ,அதில் அண்ணா அவர்கள் தேன் தடவி கொடுத்தார் .நாடாளுமன்றத்திற்கு அண்ணா சென்றார் .கவர்சிகரமான உருவம் அல்ல ,நான்கு முழ வேட்டி,சாதாரண சட்டை மேலே ஒரு கைத்தறி துண்டு .உள்ளே நுழைந்த போது எவரும் திரும்பி பார்க்கவே இல்லை .ஆனால் பின் நாட்களில் அவரை கவனிக்காமல் நாடாளுமன்றம் இல்லை .அண்ணா பேச ஆரம்பித்த போது நிமிர்ந்த நேரு ,திரும்பிய டெல்லி இன்னமும் திரும்பவே இல்லை கலைஞர் என்ற தலைவர் இங்கு இருப்பதால் .நாடு ,மொழி ,இனம் என்ன என்பதை முதன் முதலாக அண்ணா அவர்கள் தான் அங்கு சென்று புரியவைத்தார் .எங்கே எதை சொல்லக் கூடாது என்பார்களோ அதை சொல்லக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தது .எந்த மன்றத்தில் எதை பேசக் கூடாது என்றார்களோ அந்த மன்றத்தில் அதை பேசினார் .இன்றைக்கு நாங்கள் பேசுகிறோம் இந்தி கூடாது என்று எங்களை எதிர்த்து பேச முடியவில்லை ,இந்தி படிக்கலாமே என்று மன்றாடுகிரார்களே தவிர பேசாதே என்று சொல்ல துணிச்சல் வரவில்லை .இது அண்ணாவால் கலைஞரால் பெற்ற மாற்றம் ,உயர்வு .ஆனால் அவர் சென்ற காலத்தில் இந்தி வெறியர்களின் ஆதிக்கம் இருந்த நேரத்தில் அங்கே சென்று தமிழ் மொழியின் உயர்வு பற்றி பேசினார் இந்தி மொழி ஆதிக்கத்தால் ஏற்ப்படும் விளைவுகள் பற்றி பேசினார் தாய் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்றார் .i am from Madras sorry prevented to say Tamilnadu என்று சொல்லி எதை சொல்லக் கூடாது என்பார்களோ அதை சொல்லக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தது .என்னோடு இருக்கிறவனை பல பேருக்கு முன்னால் ''முட்டாள் ''என திட்ட நினைக்கிறேன் அனால் எல்லோரும் இருக்கிற காரணத்தால் தவிர்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ,முட்டாள் என்று சொல்லி விட்டேன் அப்படிதான் .i am from Madras sorry prevented to say Tamilnadu என்று சொல்லி எதை சொல்லக் கூடாது என்பார்களோ அதை சொன்னார் அண்ணா .
My country ecomicaly ill ,educationaly dull ,industrialy nil ,but culturaly well என்று ஆரம்பித்தவர் அண்ணா .தமிழ்நாடு பெயர் மாற்றம் வேண்டும் என கேட்ட போது இதனால் என்ன ஆதாயம் என்று ஒலித்தது ஒரு குரல் .அண்ணா திரும்பி பார்த்துவிட்டு அவருக்கு பதில் சொல்லவில்லை நேருவை பார்த்து சொன்னார் ''நேரு அவர்களே ஆரிய திராவிட போரை எங்களை போல் நீங்களும் அதிகம் அறிந்தவர் தான் திராவிடர் இனத்தின் வாழ்வு தெரியும் வளர்ச்சி தெரியும் வீழ்ச்சி தெரியும் வீழ்ந்ததற்கான காரணம் தெரியுமா ?தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாடு பெயர் மாற்றம் வேண்டும் என கேட்ட போது இதனால் என்ன ஆதாயம் கேட்ட குரல் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த குரல் அல்ல குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த குரல் அல்ல காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வந்த குரல் அல்ல என் தாய் தமிழ்நாட்டில் காவிரிநீர் ஓடுகிற மண்ணில் இருந்து தமிழன் கேட்கிறான் இதனால் என்ன ஆதாயம் என்று .இது தான் எங்கள் வீழ்ச்சி என்று சொல்லிவிட்டு இந்தியாவின் மிகஉயர்ந்த பொறுப்பாம் குடியரசு தலைவர் பொறுப்பை ராஷ்ட்ரபதி என்று அழைக்கும் போது மக்களவையை லோசபா என்றும் மாநிலங்களவை ராஜ்யசபா என்றும் பல மாநிலங்களை அதன் மொழிகளின் பெயரால் அழைக்கும்போது தமிழ்நாடு என பெயர் சூட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்டதால் அவரின் கேள்விக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது
திராவிடர் கழகம் திராவிடர் முன்னேற்ற கழகமாக பிரிந்த காரணத்தினால் செந்தமிழ் மண்ணுக்கு தமிழ்நாடு என பெயர் கிடைத்தது .இந்திக்கு இந்த நாட்டில் இடமில்லை என்ற சட்டம் உருவானது ,சுயமரியாதை திருமணச் சட்டம் உருவானது .பெண்களுக்கு சொத்தில் உரிமை வேண்டும் என்று 1929இல் அய்யா இயற்றிய தீர்மானத்தை தலைவர் கலைஞர் சட்டவடிவமாகினார்
இந்த மன்றத்தில் இரண்டு தலைவர்களை பற்றி பேசுகிறேன் .இந்த மன்றத்தில் பெரியாரும் இல்லை அண்ணாவும் பின் எதற்கு அவர்களுக்கு பாராட்டு .யாரையாவது பாராட்டினால் ஏதாகிலும் கிடைக்கும் என்பதற்கு தானே பாராட்டுவார்கள் ஆனால் அந்த அவசியம் இல்லாதவர்கள் தான் இந்த மன்றத்தில் நிறைந்து இருப்பதை பார்க்கிறேன் .இங்கு விடுதலை வாசகர் வட்டம் பல பேரை அழைத்து பல தலைப்புக்களில் பேச சொல்கிறீர்களே எதை எதிர்பார்த்து, நான் அடிக்கடி தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் ''ஏதாவது கிடைக்கும் என்கிற இடத்தில் கூட ஆட்களை அழைத்து செல்வது சிரமமாக உள்ளது எதுவுமே கிடைக்காது என்று உறுதியாக தெரிந்து இழப்புக்களை தான் தாங்க வேண்டி இருக்கும் என்ற நிலையையும் தெரிவித்து இத்தனை பேரை எப்படி தான் கொண்டு செல்கிறீர்களோ ''என்றேன் உண்மையும் அது தான் எதிர்பார்ப்பு இல்லாமல் உறவினர் கூட வருவதில்லை ,ஆதாயம் இல்லை என்கிற போது விலகி ஓடுகிற நண்பர்கள் கூட்டத்தை பார்க்கிற போது ,எதுவும் கிடையாது இதை விட இன்னும் மோசமாய் இழக்க வேண்டி இருக்கும் ஆனால் கொள்கை தேவை என்று நினைக்கிறவர்கள் இந்த அரங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் ,எத்தனை பேர் என்கிற போது இந்த அரங்கம் சிறியது ஆனால் நிரம்பி வழிகிறது .எத்தனை பேர் என்பதை எண்ணிக்கையால் நான் பார்கவில்லை எப்படிபட்டவர்களால் நிரம்பி இருக்கிறது என்றே பார்கிறேன் .இங்கே ஒரு பத்தாயிரம் பேர் திரண்டிருக்கலாம் ,பேசுவதை கேட்காமலே கூட போய்விடலாம் .வந்து களைந்து செல்லும் ,ஆனால் விடுதலை வாசகர் வட்டம் நடத்துகிற கூட்டம் பத்தாயிரம் பேர் அல்ல ஒரு நூறு பேர் ஒரு இருநூறு பேர் ஆனால் இந்த இருநூறு பெரும் இருபதாயிரம் பேரை சென்று சேர்க்கும் வலிமை உள்ளவர்கள்
நாம் ஒரு இடத்தில் கூடி பேசுகிறோம் ,நாம் சாதித்து என்ன ?எதிர்காலத்தில் நாம் சாதிக்க வேண்டியது என்ன ?என்கிற வினாவோடு தான் கலைந்து செல்ல இருக்கிறோம் .இந்த கூட்டத்தில் புதியவர்கள் வந்திருக்கலாம் ,மன மாற்றம் ஏற்ப்படலாம் ,அப்படி புதியவர்கள் நம் கருத்துக்களால் கவரப்பட்டு நம்மை நோக்கி வருவார்களே ஆனால் இன்று மாலை நடைபெற்ற இந்த கூட்டம் வெற்றி பெற்றது என்றே பொருள் என்று உரையாற்றினார்
''தென்றலும் புயலும் '' வாசகர் வட்ட 45 ஆம் நிகழ்வு
இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலர் டி.செங்குட்டுவன் தலைமை வகித்து உரையாற்றினார்.திமுக ஒன்றிய செயலரும் வாசகர் வட்ட புரவலருமான எக்கூர் த.செல்வம் , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி ஜி இளங்கோ , ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலர் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளர் தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலர் போன்ற பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட பணியாற்றிவரும் வாசகர் வட்ட உறுப்பினர் கவி .செங்குட்டுவன் (எ )இராசேந்திரன் அவர்களை பாராட்டி கருத்துரை ஆற்ற வருகை தந்த திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி .என் .சிவா அவர்கள் பாராட்டி தமிழர் தலைவர் எழுதிய ''வாழ்வியல் சிந்தனைகள் '' என்கிற நூலினை பரிசளித்தார்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் காஞ்சனா கமலநாதன் , மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே .ஆர் .கே .நரசிம்மன் .விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய செயலாளர் நாசி .சரவணன் ,திமுக நகர அவைத்தலைவர் பா .அமானுல்லா ,திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா இளங்கோ, இந்திய மருத்துவ சங்க பொறுப்பாளர் மருத்துவர் வெ.தேவராசன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்.
நிறைவாக வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் .இராசேந்திரன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார்.நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் திருச்சி .என் .சிவா அவர்கள் எழதிய ''பேச்சை தொழிலாக கொண்டவன் சொல்கிறேன் மனைவியிடம் பேசுங்கள் " என்கிற கட்டுரையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ,யு .ஆர் .அனந்தமூர்த்தி குறித்த குறிப்புக்களும் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்
Subscribe to:
Posts (Atom)