ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையும் இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா ,தமிழர் தலைவர் எழுதிய ‘’அய்யாவின் அடிச்சுவட்டில் ‘’ நூல் அறிமுகம் ,மக்கள் கவிஞர் இன்குலாப் படத்திறப்பு ,சாதனை தமிழர்களான மெட்ராஸ் ,கபாலி ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் இரஞ்சித் ,ஒளிப்பதிவாளர் கோ .முரளி ஆகியோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக ஊற்றங்கரை திருமண கூடத்தில் காலை 1௦ மணியளவில் வெகு சிறப்பாகவும் மிகுந்த எழுச்சியுடனும் நடைபெற்றது
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதம் படிக்கப்பட்டது.வாழ்த்து கடிதத்தில் ‘’பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவரும் கருத்துரையாலர்களை அழைத்து பாராட்டி வருவது மகிழ்ச்சிக்குரியது .அந்த நோக்கத்தோடு பாராட்டப்பட உள்ள வளர்ந்து வரும் ஆற்றல் வாய்ந்த தமிழர்கள் திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் ,ஒளிப்பதிவாளர் கோ.முரளி ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ,விழா மிகவும் சிறப்பாக நடந்தேற எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டதை படித்த போது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது .
நிகழ்வினை ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை,ஜி,கருணாநிதி வரவேற்ப்புரையாற்றி தொடங்கி வைத்தார்
.நிகழ்விற்க்கு வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார் .மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அகிலா எழிலரசன் ,அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் ,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் க.அருள் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
தமிழர் தலைவர் எழுதிய ‘’அய்யாவின் அடிச்சுவட்டில்’’நூலினை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா .சரவணன் அறிமுகப்படுத்தி உரையாற்றினார் ,ஊற்றங்கரை அனைத்து வணிகர் சங்க தலைவர் செங்கோடன் நூலினை வெளியிட ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் பொருளாளர் வழக்கறிஞர் .பொன்னுசாமி ,நல்லாசிரியர் இர.தர்மலிங்கம் ,அனைத்து வணிகர் சங்க செயலர் இர.உமாபதி ,காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் டி .எஸ் .திருநாதன் ,ரஜினி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் ரஜினி சங்கர் ,ஊத்தங்கரை பிரெஸ் கிளப் பொறுப்பாளர் பாபு ,செஞ்சிலுவை சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.கே .இராஜா ,ஒய் .எஸ்.ஏ செயலாளர் கார்த்தி ,நகர திமுக செயலர் பாபுசிவக்குமார் ,நகர திமுக பகுத்தறிவு கலை இலக்கியப்பேரவையின் அமைப்பாளர் எஸ்.ஏ.காந்தன் ,மாவட்ட திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் மரு.மாலதி நாராயணசாமி ,விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ஜெயலட்சுமி,சா .அசோகன் ,குபேந்திரன் ,ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் இரா .வேங்கடம் , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொருளார் வே.முருகேசன் ,பெரியார் பிஞ்சு ஆர்.பவன் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் வரிசையில் நின்று நூலினை பெற்று கொண்டார்கள் .நூல் அறிமுகம் செய்த பத்தே நிமிடங்களில் .நூல்கள் விற்று தீர்ந்தன .நூல் கிடைக்காத நிலையில் பலரும் நிதியினை அளித்து முன்பதிவு செய்து கொண்டார்கள்
வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் வ.சாமிநாதன் ,பிரெஸ் கிளப் பொறுப்பாளர்கள் ஆர்.ஆர் .சுப்பிரமணி ,கஜேந்திரன் ,இரா .வேங்கடம் ,சா.அசோகன் ,கண்ணன் ,மரு.மாலதி ஆகியோர் நூலினை அளித்து சிறப்பு செய்தார்கள்
நவம்பர் 26 அன்று மறைவுற்ற கவிஞர் இன்குலாப் அவர்களின் படத்திறப்பு நடைபெற்றது.முன்னதாக 1980களில் அரியலூர் மாவட்டம் குழப்பாடி கிராமத்தில் கிணற்றில் குளித்தமைக்காக மூன்று சிறுவர்களை மின்சாரம் பாய்ச்சி கொன்றதை கண்டித்து கவிஞர் இன்குலாப் எழுதிய ‘’மனுசங்கடா நாங்க மனுசங்கடா”என்கிற பாடல் ஒலிபரப்பப்பட்டது .பின்னர் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் ஆ.சிங்கராயர் கவிஞர் இன்குலாப் அவர்களின் படத்தினை திறந்து வைத்து புகழுரையாற்றினார்
பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் முரளி ஏற்புரை நிகழ்த்தும்போது 2010 ஆண்டிற்கான சியாம் -ராத் -சாகர் என்னும் இந்தி மற்றும் ஆங்கில குறும்பட சிறந்த ஒளிப் பதிவிற்கான 58ஆவது அகில இந்திய சினிமா விருதினை குடியரசு தலைவரிடம் பெற்ற போது ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் தன்னை அழைத்து பாராட்டியது . ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் தந்த உத்வேகத்தினால் தான் இன்றைக்கு வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளராக உள்ளேன்.ஊற்றங்கரையில் திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் பலர் இருக்கின்றனர் .அவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கபடுத்தும் பெரும் பொறுப்பு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திடமும் ஊற்றங்கரை மக்களிடமும் உள்ளது என குறிப்பிட்டார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் கருத்து பதிவேட்டில் சக மனிதனை அவனது சிறப்பியல்புகளை அடையாளப்படுத்தி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் நம் பகுதியில் முன்னோடி இயக்கமாக செயல்படும் விடுதலை வாசகர் வட்டம் முன்னிலையில் இருக்கிறது .அப்படி ஒரு சூழலை எனக்கு ஏற்படுத்தி தந்ததின் உத்வேகம் என்னை மேலும் மேலும் முன்னெடுக்கும் உந்துசக்தியாக இருப்பது இதன் பணி பாராட்டத்தக்கது .அத்யாவசமானது ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை வாழ்த்துகிறேன் என பதிவு செய்து கையெழுத்திட்டார்
விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் சித .வீரமணி விழா அறிமுக உரையாற்றினார் .ஊற்றங்கரை நகரின் முக்கிய பிரமுகர்களான வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் அவர்களும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் அவர்களும் இணைந்து இயக்குனர் இரஞ்சித் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் முரளி அவர்களுக்கும் சால்வை அணிவித்து தந்தை பெரியார் முழு உருவ சிலையினை கண்ணாடி பேழையில் அமைத்து நினைவு பரிசாக அளித்தனர் .அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டி எழுப்பிய கரவொலியால் அரங்கம் நிறைந்தது ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மற்றும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி அளிக்கப்பட்ட இந்த நினைவு பரிசு வெறும் பரிசல்ல பெரியார் என்கிற ஆயுதத்தை சாதனை தமிழர்களுக்கு வழங்குகிறோம் என்று அறிவிக்கப்பட்ட போது கரவொலியாய் உணர்வலைகள் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது .
ஒளிப்பதிவாளர் முரளி அவர்களின் பெற்றோர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான கோவிந்தராசு ,சரோஜா ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர் குடும்பத்தின் சார்பில் உரையாற்றிய ஒளிப்பதிவாளர் முரளி அவர்களின் தாயார் ஆசிரியை சரோஜா அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் தாம் அடைந்த அவமானங்கள் துயரங்களையெல்லாம் கூறி தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கார் ஏற்படுத்திய சமுக மறுமலர்ச்சியினால் தான் மாற்றங்கள் உருவாகி உள்ளது என்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட பணிகள் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்கள் சாதனை தமிழர்களை பாராட்டி உரையாற்றினார் .அவர் தனது உரையில் கொண்ட கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி ஜாதி மதங்களை கடந்து ஒரு கவிதை போராளியாக தனது வாழ்வை அமைத்து கொண்ட கவிஞர் இன்குலாப் குறித்த பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டார் ,சங்க இலக்கியங்களில் அவ்வையார் குறித்த பல்வேறு செய்திகளை கூறி அவ்வையார் குறித்த கவிஞர் இன்குலாப் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் ,இயக்குனர் இரஞ்சித் அவர்கள் இயக்கிய அட்டகத்தி ,மெட்ராஸ் ,கபாலி ஆகிய படங்கள் குறித்தும் அதையொட்டி எழுப்பப்பட்ட அரசியல் ,பெண்ணிய கருத்துக்கள் உள்ளிட்ட பல செய்திகளை அரங்கின் சிந்தனைக்கு வைத்தார் .அவ்வாறே பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் முரளி அவர்களை குறிப்பிட்டு திரையுலகின் பிரபலமான ஒளிப்பதிவாளர்களை நினைவு கூர்ந்து பழைய படங்களில் தொடங்கி புதிய படங்கள் வரை ஒளிப்பதிவாளர்கள் பங்கு பற்றி விரிவாக அலசி முரளி அவர்களின் திறமையை பாராட்டி உரையாற்றினார் .அத்துடன் புதிய கல்விகொள்கையினால் ஏற்படும் ஆபத்து குறித்தும் இளைஞர்களும் மாணவர்களும் சமூகப்பணிகளுக்கு பங்களிக்கவேண்டும் என்றும் உரையாற்றினார் .அரங்கு நிறைந்த கூட்டம் எவ்வித சலசலப்பும் இன்றி அவரது உரைக்கு கட்டுண்டு கிடந்தது
பாராட்டு பெற்ற மெட்ராஸ் ,கபாலி திரைப்படங்களின் இயக்குனர் பா.இரஞ்சித் ஏற்புரை நிகழ்த்தும் போது ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் போல ஒரு அமைப்பு எங்கள் ஊரில் இல்லையே என்கிற ஏக்கம் எனக்கு ஏற்படுகிறது .எனது ஊர் மிகசிறிய ஊர் .ஜாதிய ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதும் சிந்தித்தும் கருத்து பரிமாறி கொண்டிருந்தேன் .ஜாதி ஒழிப்பு குறித்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி உள்ளவனிடம் கூறுவதை காட்டிலும் ஒடுக்குகிற சமூகத்திடம் கூறவேண்டும் என்று முடிவு செய்தேன்.திரைப்படம் இரண்டு சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் பெரியாரிய அம்பேத்காரிய சிந்தனைகளை திரையில் இடம் பெற செய்தேன் .ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றார் அம்பேத்கார் .விஷம் பாதித்த சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம் .ஜாதி ஒழிப்பை மையப்படுத்தி வேகமாக செலாற்றவேண்டிய தருணம் இது .கபாலி திரைப்படம் வெளிவந்த போது பெரியாரியளாலர்களும்,முற்போக்கு இயக்கத்தினரும் பெரும் ஆதரவை தந்தார்கள் .தொடர்ந்து ஜாதி ஒழிப்பை மையப்படுத்தி செயல்படுவோம் என்று உரையாற்றினார் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் கருத்து பதிவேட்டில் ஊத்தங்கரையில் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டம் அமைத்த பாராட்டு விழா மிகவும் கவர்ந்தது ,அருமை
தோழர் அருள்மொழியின் பாராட்டும் விமர்சனமும் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது .இந்த மாதிரி பாராட்டுக்களும் விமர்சனங்களும் எனது படைப்பபுக்களை செழுமை படுத்திக்கொள்ள நான் முயற்ச்சிப்பேன்
No comments:
Post a Comment