விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 1 September 2013

பெரியார் தொண்டர்களும் இயற்கை ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றவேண்டிய காலகட்டம் இது .




                            விடுதலையே எனக்கு மிகப் பெரிய அறிவு வெளிச்சம் தந்தது  !

                            
                               இயற்கை வேளாண் அறிஞர் முனைவர் நம்மாழ்வார் உரை

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் பகுத்தறிவாளர்களை நேரில் சந்தித்து உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன் .பகுத்தறிவாளர்கள் நெஞ்சில் நம்மாள்வார்க்கும் இடமளித்திருப்பதை கண்டு என் கண்களில் நீர் தழும்புகிறது .பெரியார் என்கிற மாமனிதர் நீண்ட வாழ்ந்து ,வாழ்நாள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மூட நம்பிக்கையை எதிர்த்து சாடினார் .மூட நம்பிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் .
நெல்லையில் பெரியார்
ஒரு முறை பெரியார் நெல்லை கூட்டதிற்கு பேச சென்றார் .நெல்லை கூட்டத்தில் பேசும் போது '' சென்னையிலிருந்து நெல்லைக்கு ரயிலில் வர வேண்டும் என்றால் 15 மணி நேரம் ஆகும் .இந்த ரயிலை யார் கண்டு பிடித்தான் என்றால் மேல்நாட்டுக்காரன் கண்டுபிடித்தான் . சென்னையிலிருந்து நெல்லைக்கு மோட்டார் காரில் வரவேண்டும் என்றால் 18 மணி நேரம் ஆகும் இந்த மோட்டார் காரை யார் கண்டு பிடித்தான் என்றால் மேல்நாட்டுக்காரன் கண்டுபிடித்தான் . சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் வந்து அங்கு இருந்து நெல்லை வரவேண்டும் என்றால் 3 மணி நேரம் 20 நிமிடம் ஆகும் இந்த விமானத்தை யார் கண்டு பிடித்தான் என்றால் மேல்நாட்டுக்காரன் கண்டுபிடித்தான்.சென்னையிலிருந்து அதே நிமிடம் நெல்லைக்கு தொலைபேசியில் பேசலாம் .தொலைபேசியை யார் கண்டு பிடித்தான் என்றால் மேல்நாட்டுக்காரன் கண்டுபிடித்தான் .இந்தியாக்காரன் என்ன கண்டு பிடித்தான் .மரத்தில் சட்டம் போட்டு தேர் கண்டு பிடித்தான் .தேரில் யார் போகிறார்கள் என்றால் நெல்லையப்பர் போகிறார் என்கிறார்கள் .எங்க போகிறார் என்றால் அவர் வைப்பாட்டியை பார்க்க போகிறார் என்கிறார்கள் .நெல்லையப்பர் வைப்பாட்டியை பார்க்க போனதால் நான் கூட்டத்திற்கு வருவதற்கு 2 மணி நேரம் கால தாமதம் ஆகி விட்டது மன்னிக்கவும் '' என்றார் பெரியார் . இந்த நெல்லையப்பருக்கு எவ்வளவு உயரமான கோவில் கட்டி வைத்திருக்கிறாய் ?பால் ,பழம் ,தேங்காய் ,என எத்தனை படையலை படைக்கிறாய் ஆனால் நெல்லையப்பருக்கு கழிப்பறை மட்டும் கட்டவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினார் பெரியார் .

விடுதலை தந்த வெளிச்சம்
கோடான கோடி மக்கள் பட்டினியில் கிடக்க நெல்லையப்பர் பெயரை சொல்லி ஒரு  சமுகம் கொள்ளை அடிப்பதை கண்டு அய்யா கோபப்பட்டார் .''மனிதர் உணவை மனிதன் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்கை இனி உண்டோ ? என்றோ பார்பன கவிஞன் பாரதி பாடியது போல் மனிதர்களை நோகடித்து ,மனிதனை பட்டினியிட்டு அந்த சொத்தினை தனதாக்கி கொள்ள ஒரு கூட்டத்தால் மூட நம்பிக்கை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது .நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றவன் .நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் கல்வி கற்க உள்ள நுழைந்த வருடம் தான் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பல்கலைகழகத்தில் கல்வி முடித்து வெளியேறினார் . விடுதலை ஏடு  பல்கலைகழகத்தில் படிக்க கிடைக்கும் .தந்தை பெரியார் அவர்கள் தீபாவளி சமயத்தில் விடுதலையின் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினர் அதில் ''ஏ தமிழா நீ பட்டாசுக்கு வைக்கின்ற நெருப்பு உன் பகுத்தறிவுக்கு வைக்கின்ற நெருப்பு .தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது கொஞ்சம் யோசித்து பார் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் காதல் ஏற்பட்டது .அந்த காதல் விளைவாக நரகாசூரன் பிறந்தான் . நரகாசூரன் மக்களுக்கு கொடுமை செய்தான் .மக்கள்  மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள் .அப்பன் மகனை விரட்டி கொண்டு போனான் .மகன் நரகாசூரன் பூமியை பாயாக சுருட்டிக் கொண்டு கடலில் புகுந்து விட்டான் .மகாவிஷ்ணு பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை எடுத்து நரகசூரனை கொன்றான் .அவன் செத்த கருமாதியைத்தான் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பலகாரம் சுட்டு பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறோம் .அருள்கூர்ந்து சிந்தியுங்கள் எங்காவது மண்ணுக்கும் மனிதனுக்கும் காதல் உண்டாகுமா ?மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் காதல் உண்டானது எப்படி ? அப்படி காதல் உண்டாகிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம் .அதற்க்கு  பிள்ளை எப்படி உருவாக முடியும் .பிள்ளை உண்டாகிவிட்டதாகவே  வைத்துக்கொள்வோம் .அப்பன் நல்லவனாகவும் மகன் கெட்டவனாகவும் எப்படி இருக்க முடியும் இருந்து போனதாகவே வைத்துக்கொள்வோம் அப்பன் மகனை கொலை செய்வானா ? கொலை செய்யப்போனதாகவே வைத்துக் கொள்வோம் .அவன் எப்படி பூமியை பாயாக சுருட்ட முடியும் ?கடலுக்குள் ஒளிய முடியும் ? பூமியில் தானே கடல் உள்ளது கடலுக்குள் போனதாகவே வைத்துக்கொள்வோம் பன்றி உருவம் எடுத்து கடலுக்குள் போக முடியும் .பன்றி கடலில் முழ்கி இறக்காதா ? கடலில் முழ்கி வந்ததாகவே வைத்துக் கொள்வோம் அப்பன் மகனை கொன்ற தினத்தை கொண்டாடலாமா ?  ஏ தமிழா நீ பட்டாசுக்கு வைக்கின்ற நெருப்பு உன் பகுத்தறிவுக்கு வைக்கின்ற நெருப்பு என்று தந்தை பெரியார் விடுதலையில் எழுதிய அந்த கட்டுரை எனக்கு மிகப்பெரிய அறிவு வெளிச்சத்தை தந்தது

மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும்போது  மூட நம்பிக்கையை களைவதற்கு திரும்ப திரும்ப கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார் பெரியார் .இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுபட விஞ்சானம் துணை செய்யும் என்று நம்பினோம் விஞ்சானத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம் .இந்த நம்பிக்கையை பயன்படுத்தி ,விஞ்சான முகமுடி அணிந்து கொண்டு வியபாரத்தன்மையினை இந்தியாவில் புகுத்தி மக்களை நாசம் செய்கிற நிலைமையை தான் பசுமை புரட்சி என்று அழைக்கப்படும் நவீன வேளாண்மை அல்லது விஞ்சான வேளாண்மை அல்லது இரசாயனம் மிகுந்த வேளாண்மை செய்து கொண்டு இருக்கிறது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தான் எல்லாம் வல்லவன் எல்லாம் வல்லவன் என்றால் கொலை நடப்பதற்கு முன் தடுத்திருக்க வேண்டாமா ?என்று கேட்டார் அதே போல்தான் பொய்யையும் மூட நம்பிக்கையும் வளர்த்து விஞ்சானம் என்கிற போர்வையில் இந்த மக்களை வாழ தகுதி அற்றவர்களாக ,புற்றுநோயளியாக ,நீரிழிவு நோயாளியாக ,சிறுநீரக நோயாளியாக மாற்றிவரும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராக அக் கம்பனிகளுக்கு விலைபோயுள்ள மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக இயற்கை ஆர்வலர்களும் கருப்புசட்டைகளும் இணைந்து பணியாற்ற நிறைய காரியங்கள் உள்ளன .பெரியார் தொண்டர்களும்  இயற்கை ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றவேண்டிய காலகட்டம் இது .           
பெரியாரும் இயற்கையும்
இங்கே வரும் போது விடுதலை வாசகர் வட்டம் பற்றி கூறி கொண்டு வந்தார்கள் ,உண்மையில் இது ஒரு பகுத்தறிவு பாசறை .நான் எங்கு சென்றாலும் பெரியார் தொண்டர்கள் என் மீது அன்பு காட்டுவதை கண்டு நெகிழ்கின்றேன் .இயற்கையை நேசித்தவர் பெரியார் .இயற்கையும் பெரியாரும் இணைந்தே இருக்க வேண்டும் .
 கோவையில் தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்திற்கு சென்றேன் .அக் கூட்டத்தில் பெரியார் பேசினார் ''ஒரு விவசாயி பார்த்து கேட்டேன் எத்தனை குழந்தைகள் ? என்று அந்த விவசாயி சொன்னார் கடவுள் எனக்கு 5 குழந்தைகளை கொடுத்திருக்கிறார் என்று பெரியார் கேட்டார் 5 குழந்தைதகள் கடவுள் கொடுக்கிற வரையில் நீ ஏன் திண்ணையில் படுத்துக் கொண்டு இருந்தாய் என்று பேசினார் .அடுத்த தலைமுறை அறிவுடைய சமுதாயமாக மலர தொடர்ந்து பாடுபட்டவர் பெரியார் .அப்படி அடுத்த தலை முறைக்கு  நல்ல பூமியை தர வேண்டும் ,நல்ல வாழ்க்கையை தரவேண்டும் ,மாசு ,நஞ்சு இல்லா உலகை தரவேண்டும் எனில் மானுட பற்றாலர்களாம் பெரியார் தொண்டர்களும் இயற்கை  ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறி முடிக்கிறேன் என்று இயற்கை வேளாண் அறிஞர் முனைவர் நம்மாழ்வார் உரையாற்றினார்

No comments:

Post a Comment